சவுதி அரேபியாவில் மினா நகரில் நெரிசலில் சிக்கி இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது.
ஹஜ் புனித பயணத்தின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி சவுதியின் மினா நகரில் நடைபெற்றது. அப்போது அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பலர் காணாமல் போனதாகவும் அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அவசர உதவி மைய தொடர்பு எண்கள்,
மெக்கா: 00966125458000 00966125496000, கட்டணமில்லா சேவை எண் (சவுதி): 8002477786 என்ற விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இறந்தவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த சம்சுதீன் முகமது இப்ராஹிம் (60), தென்காசியை சேர்ந்த மொகிதீன் பிச்சை (65), திருச்சியை சேர்ந்த ரெமிஜென் (51) உள்ளிட்ட தமிழர்கள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. மற்றவர்களின் விவரம் வெளியிடப்படவில்லை.