ரஷ்யாவில் புதிதாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஷ்யாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில்,” ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,212 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,82,347 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 129 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 -ம் தேதி ரஷ்யா அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய உள்ளது. கடந்த ஜூன் மாதம் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் பரவியது. தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.