இலங்கையில் நடந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி (எஸ்எல்பிபி) கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய இலங்கை பொதுமக்கள் முன்னணிக் கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில் (196) 150 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்து 145 இடங்களில் வென்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் குறிப்பாக சிங்கள மக்கள் அதிகமாக வாழும் தெற்கு மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பாலான இடங்களை ராஜபக்ச கட்சி பெற்று வெற்றி அடைந்துள்ளது.
தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் உலக அளவில் முதல் தலைவராக பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். அவரின் வாழ்த்துச் செய்தியில், ''இலங்கையும், இந்தியாவும் இரு தரப்பு ஒத்துழைப்புடன் கூட்டாக அனைத்துத் துறைகளிலும் செயல்படுவோம். நம்முடைய சிறப்பான இந்த உறவு புதிய உச்சத்துக்குச் செல்லும்'' எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ச ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “தொலைபேசி மூலம் அழைத்துப் பேசியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறேன். நம்முடைய இரு நாடுகளின் நீண்ட நாடுகளின் நீண்டகால நட்பு மேலும் வளரவேண்டும். இந்தியாவும், இலங்கையும் நண்பர்கள், உறவுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபராக ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 8 ஆயிரம் சுகாதாரக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல் முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.
தேர்தல் முடிந்து வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களில் மட்டுமே நேரடியாக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்ற இடங்களில் கட்சிகளின் வாக்குவீதத்தின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுமக்கள் முன்னணிக் கட்சி 150 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் 19-வது திருத்தமாக அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தத்தை நீக்க இதுபோதுமானதாக இருக்கும்.
விக்ரமசிங்கே கட்சிக்கு விழுந்த அடி
இந்தத் தேர்தலில் மிகப்பெரிய அடியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு (யுஎன்பி) இருந்தது. யுஎன்பி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட மிகப்பெரிய கட்சியான யுஎன்பி கட்சியால் வெல்ல முடியவில்லை.
1977-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்கே, 4 முறை பிரதமராக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரால் கொழும்பு மாவட்டத்தில் கூட வெல்ல முடியவில்லை. அவரின் யுஎன்பி கட்சி பல இடங்களில் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக யுஎன்பி கட்சி 2.49 லட்சம் வாக்குகள் அதாவது தேசிய அளவில் 2 சதவீதம் மட்டுமே பெற்று 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
புதிய கட்சிக்கு மக்கள் ஆதரவு
யுஎன்பி கட்சியிலிருந்து விலகி தனியாக எஸ்ஜேபி எனும் கட்சி தொடங்கிய சஜித் பிரமேதாசா, முஸ்லிம் கட்சியின் ஆதரவுடன் 55 இடங்களில் வென்றுள்ளார். குறிப்பாக திரிகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை பிரேமதசா கட்சி கைப்பற்றியுள்ளது.
சஜித் பிரேமதாசாவின் எஸ்ஜெபி கட்சி 2.70 லட்சம் வாக்குகளைப் பெற்று, அதாவது 23 சதவீதம் வாக்குகளைப் பெற்று 2-வது பெரிய கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் முக்கியக் கட்சியாக திகழும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை மோசமான தோல்வியைப் பெற்றது. கடந்த முறை 16 இடங்களில் வென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை 10 இடங்களில் மட்டுமே வென்றது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாவட்டங்களில் 3.27 லட்சம் வாக்குகள் அதாவது 2.82 சதவீதம் வாக்குகள் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.
3-வது இடம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜெவிபி) கட்சி கடந்த தேர்தலில் 6 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 3 இடங்களை மட்டுமே கைப்பற்றி நாட்டில் 3-வது பெரிய கட்சி எனும் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது. பெரும்பாலான இடங்களில் விக்ரமசிங்கேயின் யுஎன்பி கட்சி 4 முதல் 6 இடங்களைப் பெற்றது.