இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளின் முடிவில் மகிந்தா ராஜபக்ச கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.
இலங்கையில் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்று நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். மக்கள் சுகதாார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க 8 ஆயிரம் சுகாதாரக் கண்காணி்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.
கரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.
தேர்தலில் வாக்களிக்க வந்த மக்கள் முகக்கவசம் அணிந்தும், வாக்களிக்க வரும் மக்களுக்கு சானிடைசிங் அளித்தும் பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி நடந்து, 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இன்று காலை முதல் 64 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பிற்பகலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் படிப்படியாக வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி முதல்கட்டமாக சிங்கள மக்கள் அதிகமாக வசிக்கும் தெற்குப்பகுதியில் 5 மாவட்டங்களுக்கு முடிவுகள் வெளியானதில் இதில் மகிந்தா ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சி 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்ற சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சி(யுஎன்பி) 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதில் மார்க்சிஸ்டின் ஜனதா விமுக்தி பெரமுனா(ஜெவிபி)கட்சி யுஎன்பி கட்சியைவிட அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள்அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் யாழ்பாணம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழ்தேசியக் கூட்டமைப்பை பின்னுக்கு தள்ளி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலைபெற்றுள்ளது.. ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சியுடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக எஸ்எல்பிபி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கோத்தபாய ராஜகபக்சேயின் சகோதரருமான பசில் ராஜபக்சே செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ எங்கள் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று வரலாற்று வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் ஆனால் அனைத்தும் மக்கள் முடிவு செய்வார்கள். அதிபர் கோத்தபாய, பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் பொருளாதாரம் மீண்டும் வலுவடையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலேயே இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா ராஜபக்சேயின் எஸ்எல்பிபி கட்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.