பெய்ரூட்டில் இளம்பெண் ஒருவர் தன் திருமணத்துக்குப் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தபோது நடந்த வெடி விபத்து குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் தற்போது அப்பெண் ஊடகங்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கின.
வீடியோவில், பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் வெளியிட்டதைத் தொடர்ந்து அக்காட்சிகள் வைரலாகின.
இந்த நிலையில் அப்பெண் ஊடகங்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 29 வயதான செப்லானி என்பவர்தான் அப்பெண். அவர் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வெடி விபத்து அனுபவம் குறித்து செப்லானி கூறும்போது, “ நான் எனது திருமணத்திற்காக பிற பெண்களை போல இரண்டு வாரங்களாக தயாராகி கொண்டிருந்தேன். நான் வெள்ளை ஆடை உடுத்தி கொண்டிருப்பதை பார்க்க எனது பெற்றோர்கள் ஆர்வமாக இருந்தனர். நான் இளவரசி போல் இருந்தேன். அப்போதுத்தான் அந்த வெடிவிபத்து நடந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அதிர்ச்சியானேன். நான் இறக்க போவதாகவே நினைத்தேன்.எனினும் நாங்கள் திருமணத்தை தொடர்ந்தோம். அதன்பிறகு விருந்துக்கு சென்றோம். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தப்போது பெய்ரூட்டுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்தது. நாங்கள் உயிருடன் இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்” என்றார்.