அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்ததையடுத்து, அதைக் கொண்டாடும்வகையில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் உருவப்படம், அயோத்தி ராமர் கோயிலின் மாதிரிப் படத்தை விளம்பரப்படுத்தி இந்தியர்கள் கொண்டாடினர்.
நியூயார்க் டைம்க்ஸ் சதுக்கம், நாஷ்டாக் முன் நேற்று ஏராளமான இந்தியர்கள் பாரம்பரிய உடையில் வந்து ராமர் கோயில் அடிக்கல்நாட்டுவிழாவைக் கொண்டாடினர்.
மிகப்பெரிய எல்இடி திரையில் கடவுள் ராமரின் உருவப்படம், கோயில், இந்திய மூவர்ணக்கொடி ஆகியவை திரையிடப்பட்டன.
திட்டமிட்ட புதன்கிழமை(ஆக்.5ம்தேதி) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ராமர் படத்தை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்தி்ருந்தனர். ஆனால், பிற்பகல் 1 மணிவரை மட்டும் ராமர் படம் விளம்பரப்படுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நேற்று அயோத்தியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 175 விஐபிக்களும் பங்கேற்றிருந்தனர்.
ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமரின் உருவப் படம் விளம்பரப்படுத்த அமெரிக்கவாழ் இந்தியர்கள் சார்பில் திட்டமிடப்பட்டது.
இதன்படி, நேற்று பிற்பகல் வரை டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் உருவப்படம், கோயில், மூவர்ணக்கொடி விளம்பரப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கான விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஸ் சேவானி பிடிஐ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதைக் கொண்டாடும் வகையில்ல டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர், கோயில், தேசியக்கொடியை விளம்பரப்படுத்தினோம். வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நாளைக் கொண்டாட ஏராளமான இந்தியர்கள் வந்திருந்தார்கள்.
இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் பாரம்பரிய உடைகளை அணிந்து டைம்ஸ் சதுக்கத்துக்கு இந்தியர்கள் வந்து ராமர் பஜனைகளைப்பாடியும், பாடல்களைப் பாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடனும், தேசியக் கொடியை ஏந்தியும் இந்தியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர் “ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் படம், கோயில் போன்றவற்றை திரையிட்டதற்கு பல்வேறு குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விளம்பரப்படுத்தும் நேரம் 4 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்கவாழ் முஸ்லிம் சமூகத்தினர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோவிடம் புகார் மனுவும் அளித்தனர்.