லெபனான் நாட்டில் நேற்று நடந்த பெரும் வெடி விபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. இடிந்த கட்டிடங்களில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை செயலாளர் ஹமாத் ஹசன் கூறும்போது, “ பலர் மாயமாகி உள்ளனர். தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் தேடுதல் பணி சிரமமாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் கவர்னர் மர்வான் அப்பவுட் கூறும்போது, “100க்கும் அதிகமான மக்கள் மாயமாகி உள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்களும் அடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
அம்மோனியம் நைட்ரேட்டால் ஏற்பட்ட விபத்து
இதுகுறித்து லெபனான் பிரதமர் ஹசன் கூறும்போது, “சுமார் 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்றார்.
பெய்ரூட்டில் வெடி விபத்து நடந்த காட்சிகள்