பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 2,80,461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,49,397 பேர் குணமடைந்துள்ளனர்” என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.
பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.