அமெரிக்காவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, ''நாம் தற்போது புதிய கட்டத்தில் இருக்கிறோம். நாம் தற்போது பார்த்துக் கொண்டிருப்பது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்த கரோனா பரவலைவிட வித்தியாசமானது. அதிவேகமாக கரோனா பரவுகிறது. தற்போதுள்ள சூழல் கவலையை அளிக்கிறது.
மக்கள் முகக்கவசம் அணிவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருப்பின் முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எங்கேனும் சுற்றுலா சென்றால் நீங்கள் திரும்பும்போது உங்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது அங்கு மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கரோனா நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.