உலகம்

திட்டமிட்ட தேதியில் அமெரிக்கத் தேர்தல் நடக்கும்: சர்ச்சைகளுக்கு ட்ரம்ப் அணி முற்றுப்புள்ளி

செய்திப்பிரிவு

நவம்பர் மாதம் திட்டமிட்ட தேதியில் அமெரிக்கத் தேர்தல் நடக்கும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசகர் கூறி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் காலத்தையும் பொருட்படுத்தாமல் காணொலி வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் அரிசோனா, ஃபுளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்புகளில் அதிபர் ட்ரம்ப் பின்தங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து கரோனா சூழலில் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது அவரின் கட்சி உட்பட அனைத்துத் தரப்பிலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகையின் அலுவலர் தலைவர் மார்க் மெடோஸ் கூறும்போது, ''கரோனா தொற்றின் காரணமாகத் தபால் ஓட்டு முறை பயன்படுத்தப்பட்டால், தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது என்று ட்ரம்ப் கவலைப்பட்டார்.

அதற்காகத் தேர்தலைத் தள்ளி வைக்கிறோம் என்று அர்த்தமில்லை. நவம்பர் 3-ம் தேதி திட்டமிட்டபடி நாங்கள் தேர்தலை நடத்த இருக்கிறோம். அதில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT