அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தையும் கடந்த முதல் மாகாணமாக உள்ளது கலிபோர்னியா.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது:
கடந்த 7 நாட்களாக நாளொன்றுக்கு சுமார் 7,819 பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முந்தைய வாரங்களில் 7 நாள் தினசரி சராசரி 10,005 ஆக இருந்தது. இதனையடுத்து கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கலிபோர்னியாவில் 500,130 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அரைமில்லியன் கரோனா தொற்றுக்களை கடந்த முதல் மாகாணமானது.
கரோனா பலி எண்ணிக்கை இங்கு மட்டும் 9,224 ஆக உள்ளது. ஆனால் கலிபோர்னியாவில் 78 லட்சத்து 86 ஆயிரத்து 587 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவை அடுத்து பாதிப்பு எண்ணிக்கையில் புளோரிடா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 480,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
டெக்ஸாசில் இன்று வரை 430,485 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பலி எண்ணிக்கை 6,837 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 46 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 300 ஆக அதிகரித்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.