அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,442 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் குறிப்பிடுபோது, “கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,442 பேர் கரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,53,268 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை 69,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 47,06,059 பேர் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது அங்கு மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கரோனா நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் விலங்குகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, அந்நாட்டில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, ஒரு சிங்கம் ஆகியவை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.