பிரேசிலில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 52 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52,383 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,212 பேர் நேற்று மட்டும் பலியாக, பலி எண்ணிக்கை 92,475 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் வியாழக்கிழமையன்று 57 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில், அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன