உலகம்

ஆப்கனில் 500 தலிபான்கள் விடுவித்து அதிபர் உத்தரவு

செய்திப்பிரிவு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிறையிலிருந்து 500 தலிபான்களை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறும்போது, “ ஆப்கானிஸ்தானில் பக்ரீத் திருநாளை முன்னிட்டும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் 500 தலிபான்கள் விடுவிக்கப்பட உள்ளனர். நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்குத் தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது . 9/11 என்று அழைக்கப்படும் தாக்குதலில் அமெரிக்காவின் பெருமை எனக்கருதப்படும் இரட்டைக் கோபுர வேர்ல்ட் ட்ரேட் செண்டர் கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர்.

அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. அதன் பிறகான பல மோதல்களில் இதுவரை 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT