உலகம்

ஏலத்துக்கு வரும் டார்வினின் நாத்திக ஆதரவு கடிதம்

பிடிஐ

பரிணாம உயிரியல்வாதக் கோட்பாட்டை உருவாக்கிய இயற்கை அறிவியல்வாதி சார்ல்ஸ் டார்வின், தான் ஒரு நாத்திகன் என்று எழுதிய கடிதம் ஏலம் விடப்படுகிறது.

இந்தக் கடிதம் சுமார் நியூயார்க் ஏலத்தில் சுமார் 90,000 டாலர்களைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்வினின் மத நம்பிக்கை பற்றி எப்போதும் கடும் விவாதங்கள் நடைபெற்று வருவது வழக்கம். டார்வின் பொது இடத்தில் தனது நம்பிக்கை அல்லது நாத்திகம் பற்றி கூறியதில்லை, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.

இந்நிலையில் இளம் பாரிஸ்டர் ஒருவருக்கு டார்வின் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் வெளிப்படையாக தனக்கு பைபிள் மீதும், ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இளம் பாரிஸ்டர் பிரான்சிஸ் மெக்டர்மட் 1880ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் நூல்களை வாசிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், பைபிள் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை. இருப்பினும் நான் உங்களுக்கு இதனை எழுதும் காரணம் என்னவெனில் உங்களுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருக்கிறதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் எனக்கு போதுமானது” என்று எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய டார்வின், "பைபிள் ஒரு இறைவெளிப்பாடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே, ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று எழுதினார்.

இந்த குறிப்பை அவர் எழுதுவதற்கு ஓரு மாதம் முன்பு, அவருடைய சமகாலத்திய முக்கிய நாத்திகவாதியான எட்வர்ட் ஏவ்லிங் என்பவருக்கு அவர் எழுதிய போது, “மதம் பற்றி நான் எழுதுவதை எப்பொதுமே தவிர்த்து வருகிறேன். நான் ஒரு அறிவியல்வாதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.

ஆனால் டார்வினுக்கு மெக்டர்மட் இந்த கடிதம் வெளியிடப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது வெளிவரவில்லை.

தற்போது நியூயார்க்கில் செப்டம்பர் 21-ம் தேதி டார்வினின் இந்தக் கடிதம் ஏலத்துக்கு வருகிறது. இந்தக் கடிதம் 70,000 முதல் 90,000 டாலர்கள் வரை பெற்றுத் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT