பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,837 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,837 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 26,10,102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1,129 பேர் கரோனாவுக்குப் பலி எண்ணிக்கை 91,263 ஆக அதிகரித்துள்ளது. 18,24,095 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறிய நிலையில் அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மிச்சல் போல்சனாரோ நல்ல உடல்நலத்துடன், இயல்பாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரேசில் அமைச்சர்கள் ஓனிக்ஸ் லோரன்ஜோனி, கல்வித்துறை அமைச்சர் மில்டன் ரிபைரோ ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 1.6 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.