பிரான்ஸ் பருவ நிலை மாநாட்டின் படி எந்த நாடும் செயல்படுவதில்லை. அமெரிக்காவை மட்டும் குறை கூறுகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர்ட் ட்ரம்ப் பேசியதாவது:
பருவநிலை மாற்றத்துக்கு பெரிய காரணியாக விளங்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மாநாட்டில் போடப்பட்டது, ஆனால் இதன் படி எந்த நாடும் நடந்து கொள்ளவில்லை.
அமெரிக்காதான் கரியமிலவாயு வெளியேற்றத்தில் நம்பர் 1 என்று அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. இதனால்தான் ஒருதலைப்பட்சமான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினோம்.
அதிபர் ஒபாமா இருந்த பொது எரிசக்தி துறை நெருக்கடியில் இருந்தது, நான் தான் தீர்வு கண்டேன். அமெரிக்கா இப்போது இயற்கை எரிவாய் எண்ணெய் துறையில் நம்பர் 1 ஆக உள்ளது.
தீவிர இடதுசாரி சிந்தனையுடன் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்கப் பாரம்பரியத்தை அழிக்கப்பார்க்கின்றனர். அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையை மாற்ற முயற்சிக்கின்றனர், என்றார்.
அமெரிக்க எம்.பி. சக் கிராஸ்லி பேசும்போது, உலகளாவிய வர்த்தகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவும், சீனாவும்தான் அதிக லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் இந்த இரு நாடுகளும் ஒரு பொறுப்பையும் ஏற்பதில்லை என்று சாடினார்.