ஆப்கானிஸ்தானில் ஆப்கான் படைகள் நடத்திய தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தலிபான்கள் மீது ஆப்கான் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியது. தலிபான்களும் ராணுவம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஆப்கான் ராணுவத்திற்கு காயம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து 10,708 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 6,781 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது..
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.