உலகம்

ஹாங்காங்கில் புதிதாக 118 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ஹாங்காங்கில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 113 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை தரப்பில், “ஹாங்காங்கில் புதிதாக இன்று (புதன்கிழமை) 113 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஹாங்காங்கில் இதுவரை 3,003 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்நாட்டிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மெல்ல ஹாங்காங்கில் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. உலகம் முழுவதும் 1.6 கோடிக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT