உலகம்

ஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 295 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT