ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாகுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து 267 கோடி மலேசிய ரிங்கிட் (சுமார் ரூ.4,150 கோடி), நஜீப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி, நஜீப் ரசாக்கை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊழல் தடுப்புத் துறையினர் கைது செய்தனர்.
மேலும், மலேசிய முதலீட்டு நிதியில் பல்லாயிரம் கோடி மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், ஊழல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமதிகள் முகமது கஸ்லான், முகமது காஸ்லி அளித்த தீர்ப்பில், “இந்த விசாரணையில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்தபின், குற்றம் நியாயமான முறையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து நஜீப் ரசாக் கூறும்போது, “இது ஏற்கமுடியாத தீர்ப்பு. இது முடிவல்ல. நாங்கள் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்,