உலகம்

பொதுவெளியில் முகக் கவசத்தை கழட்டிய பிரேசில் அதிபர்

செய்திப்பிரிவு

கரோனா நோய் தொற்று குணமடைந்த ஒரு சில நாட்களிலே பொதுவெளியில் முகக் கவசத்தை கழட்டியதால் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கரோனாவுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இரு வாரங்களுக்குப் பிறகு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் போல்சனோரா கரோனா தொற்றிலுருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

தற்போது பொது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் மாஸ்கை கழட்டியதன் காரணமாக ஜெய்ர் போல்சனோரா சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் பிரேசில் ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர். கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா ஏற்கெனவே கூறி வந்தார்.

இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் கரோனாவால் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT