உலகம்

அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: கூகுள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலை அடுத்து உலகம் முழுவதும் ஐடி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தனது ஊழியர்களைப் பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தனது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காலக்கெடுவை நீட்டித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், ஊழியர்கள் தங்களின் வருங்கால இயக்கத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், உலகளாவிய அளவில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதியை நீட்டிக்கிறோம். இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், ஜூன் 30, 2021 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸால் பெரும்பாலான நேரம் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும் எனக் கூறி கூகுள் தனது ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் (சுமார் ரூ.75 ஆயிரம்) அலவன்ஸ் வழங்கியது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே மேற்கொள்வதால் அதற்குரிய பர்னிச்சர் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு உதவியாக இத்தொகை வழங்கப்படுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT