கரோனா தொற்றுக்குள்ளாகி பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தற்போது உடல் பருமனுக்கு எதிரான போருக்காகத் தனது நாட்டு மக்களைத் தயார் செய்துவருகிறார். உடல் பருமனுக்குக் காரணமான உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை ஊக்குவிப்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்துவருகிறார்.
மார்ச் 27-ம் தேதி போரிஸ் ஜான்ஸனுக்குக் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அபாரமான தன்னம்பிக்கையாலும் மருத்துவர்களின் விடாமுயற்சியாலும், கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு ஏப்ரல் 12-ல் வீடு திரும்பினார். எனினும், நீண்ட நாட்கள் சிகிச்சையிலிருந்தது அவரை வருத்தமுறச் செய்தது.
கரோனா தொற்றிலிருந்து தன்னால் எளிதில் மீண்டு வர முடியாததற்கு தன்னுடைய உடல் பருமன்தான் காரணம் என்று புரிந்துகொண்ட அவர், பிரிட்டன் மக்களுக்கும் அதேபோன்ற ஆபத்து இருப்பதையும் உணர்ந்து கொண்டார். சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின்படி பிரிட்டனில் 28.7 சதவீதத்தினருக்கு உடல் பருமன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் கரோனா தொற்று ஏறுமுகமாக இருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்தத் தகவல் போரிஸுக்குக் கவலையை ஏற்படுத்தியது.
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிவெடுத்த போரிஸ், தினந்தோறும் தன் வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார். தற்போது கணிசமாகத் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்ட அனுபவத்தையும், உடல் பருமனின் கேடுகளையும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் பற்றிப் பேசி தற்போது ஒரு காணொலியையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், பிரிட்டனில் உணவுத் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் போரிஸ்.
அதன்படி கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன.
* அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கு இரவு 9 மணிவரை தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் தடை. இந்தத் தடை முழுநேரத் தடையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
* அதிகக் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட உணவுகளின் இலவசச் சலுகை விற்பனைக்கும் தடை. பல்பொருள் அங்காடிகளில் இவ்வகையான உணவுகளைப் பிரதானமாகக் காட்சிப்படுத்தக் கூடாது. அங்காடிக்குள் நுழைந்ததும் சத்தான உணவுகளே கண்ணில் படும்படிக் காட்சிப்படுத்த வேண்டும்.
* உணவகங்கள் தாங்கள் விற்கும் உணவுப் பொருட்களின் மீது அந்தந்த உணவின் கலோரி அளவைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விதி மதுபானங்களுக்கும் பொருந்தும்.
* தற்போது நடைமுறையில் உள்ள பிரிட்டனின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்முறைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
மேலும், மக்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் உடலுக்குத் தீங்கான உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு வரியைக் குறைத்து அவற்றின் விற்பனையை அதிகரிக்கச் செய்தவர் போரிஸ் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்நிலையில், தனது தவறை உணர்ந்து, தான் அனுபவித்த கஷ்டங்களை மக்கள் அனுபவிக்கக் கூடாது எனும் உயர்ந்த நோக்குடன் களமிறங்கியிருக்கும் போரிஸுக்கு வாழ்த்துப் பூங்கொத்துகள் வந்தவண்ணம் உள்ளன!
- க.விக்னேஷ்வரன்