தென் கொரியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தென் கொரிய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென் கொரியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,092 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பரவலான ஜூலை மாதத்தில்தான் கரோனா பரவல் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவில் கரோனா பரவல் தொடங்கியது. இதுவரை அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று சீனாவிலிருந்து முதன்முதலாக தென் கொரியாவுக்குப் பரவிய நிலையில், அங்கு பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் முதற்கட்டப் பரவல் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு 900 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து முறையான பரிசோதனை மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது.