உலகம்

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் தொடர்ந்து பரவும் கரோனா

செய்திப்பிரிவு

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 13 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்குள்ள உரும்க்யூ நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 19 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3,346 பேர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என்று சீன சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரும்க்யூ நகரில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மூன்று பேருக்கு அறிகுறி இல்லாமால் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT