அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணிநேரத்துக்குள் மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வரும்காலத்தில் அதிகமான சீனத் துணைத் தூதரகங்களை மூடும் வாய்ப்பை மறுக்கப்போவதில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவத் தொடங்கியதற்குப் பின் சீனாவை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதனால், கரோனா வைரஸை சீன வைரஸ், வூஹான் வைரஸ் என்றெல்லாம் அதிபர் ட்ரம்ப் சீனாவைக் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்.
மேலும், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத் பகுதிகள், ஹாங்காங் போன்றவற்றில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா தீவிரமாகக் கண்டித்து வந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வந்தது.
இந்தச் சூழலில் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள், அறிவுசார் சொத்துரிமை, கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்கள் ஆகியவற்றை சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, அதுகுறித்து அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை அடுத்த 72 மணிநேரத்துக்குள் மூடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் நிருபர்களிடம் கூறுகையில், “அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களையும், அமெரிக்க அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிடுகிறோம்.
சீன கம்யூனிஸ்ட் அரசு அமெரிக்க இறையாண்மையை மீறுவதையும், மக்களின் தகவல்களை எடுப்பதையும் அமெரிக்கா பொறுக்காது. அமெரிக்க வேலைவாய்ப்புகளைத் திருடுவதைப் போல, நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதைப் போன்ற செயல் இதுவல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா-சீனா உறவில் நேர்மை மற்றும் பரஸ்பரத்தை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சீனத் தூதரகங்களை மூட உத்தரவிட்டுள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ஆமாம், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இன்னும் கூடுதலாக சீனத் தூதரகங்கள் மூடப்படவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை.
ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கு தீப்பிடித்தது, அதனால் மூடிவிட்டோம் என நினைத்திருந்தோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அங்குள்ள ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் அளித்த பேட்டியில் கூறுகையில், “ஹூஸ்டன் சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இது நியாயமற்ற, கண்மூடித்தனமான நடவடிக்கை. இது அமெரிக்கா-சீனா உறவில் பெரும் அழிவை ஏற்படுத்தும். இந்தத் தவறான முடிவை உடனடியாக சீனா வாபஸ் பெற வலியுறுத்துகிறோம். இதற்குப் பதிலடியாக சீனா உறுதியாக நடவடிக்கை எடுக்கும்.
அரசியல்ரீதியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் சர்வதேச சட்டங்களை தீவிரமாக அமெரிக்கா மீறுவதாகவே பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.