அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் : படம் உதவி ட்விட்டர் 
உலகம்

அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : ஜோ பிடன் குற்றச்சாட்டு

பிடிஐ


அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் என்னைப் பொறுத்தவரை அதிபர் ட்ரம்ப் மட்டும்தான் என்று அதிபர் தேர்தல் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் காலத்தையும் பொருட்படுத்தாமல் காணொலி வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் சேவைத்துறையில் உள்ள ஊழியர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் காணொலிமூலம் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் ஒருவர், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவும் காலத்தில் நிலவும் இனவெறி பேச்சுகள் எழுகின்றன, அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸை சீன வைரஸ் என்று குறிப்பிடுகிறார் இது குறித்து தங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

அதற்கு ஜோ பிடன் பதில் அளிக்கையில் “ என்னைப் பொறுத்தவரை அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் இனவெறியைப் பரப்புகிறார் என்று கூறுவேன். மக்களை அவரின் நிறத்தின் அடிப்படையில், அவர்கள் சாந்திருக்கும் நாடு, எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து ட்ரம்ப் நடத்துகிறார் இது மோசமான போக்கு.

இதுவரை இருந்த எந்த அமெரிக்க அதிபர்களும் இதுபோன்று மக்களை இனவெறியுடன் நடத்தியதில்லை, ஒருபோதும், எந்த அமெரிக்க அதிபரும் இதுபோன்று மக்களை பாகுபடுத்திப் பார்த்தது இல்லை.

ஏன், அதிபர் ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசக்கட்சியிலிருந்து வந்த அதிபர்கள்கூட இதற்கு முன் மக்களை இனவெறியுடன் நடத்தியது இல்லை.

ஜனநாயகக்கட்சியில் வந்த எந்த அதிபரும் இதுவரை அமெரிக்காவில் வாழும் மக்களை இனவெறியுடன் நடத்தியது இல்லை. எங்கள் கட்சியில் இனவெறி பிடித்தவர்கள் இருந்தார்கள், அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இனவெறிபிடித்தவர்கள் பலர் அதிபராக முயற்சி செய்தார்கள். ஆனால், இனவெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் ட்ரம்ப் மட்டும்தான். கரோனா வைரஸை தவறாகக் கையாண்டுவிட்டதை மறைக்கவே மக்களிடம் இனவெறியைப் பரப்பி அதிபர் ட்ரம்ப் திசை திருப்புகிறார்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் 100 நாட்களில் இனவெறியை நீக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு ஜோ பிடன் குற்றம்சாட்டினார்.

அதிபர் ட்ரம்ப் மீது ஜோ பிடன் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து வெள்ளை மாளிகையில் வெளியிட்ட அறிக்கையில் “ அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கனுக்குப்பின், அதிகமாக அமெரிக்க ஆப்பிரிக்க இன மக்களுக்காக நல்ல பணிகளை அதிபர் ட்ரம்ப்தான் அதிகமாகச் செய்திருக்கிறார்.
சிறுபான்மை மக்களிடையே நிலவும் வேலையின்மையை இந்த கரோனா வைரஸ் காலத்தில் குறைக்க பல நடவடிக்கை அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ளார். இனவெறிக்கான நியாயம் கற்பிப்பது குறித்து யாரும் அறிவுரை தர வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT