அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரப்பில், “ அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,91,893 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் கரோனாவுக்கு 961 பேர் பலியாகியுள்ளனர். புளோரிடா, கலிபோர்னியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 1,41,883 பேர் பலியாகி உள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக அமெரிக்காவின் 43 மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது. இதனால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்கு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.