சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும்வரை அங்கு துருக்கி படைகள் இருக்கும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைநகர் அங்காராவில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “சிரிய மக்கள் சுதந்திரமாக, அமைதியாக வாழும் வரை துருக்கிப் படைகள் சிரியாவில்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும், வடக்குப் பகுதியிலும் சில இடங்களைக் கைப்பற்றிய துருக்கிப் படைகள் சிரியாவில் முகாமிட்டுள்ளன.
சிரிய போர்
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும், கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளிக்கின் றன.
ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை சிரியாவில் முகாமிட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீதப் பகுதி அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.