உலகம் முழுவதும் ஊடகங்கள் கண்காணிப்புக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றன. தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதையும், ஊடக நிறுவனங்கள் மிரட்டப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரக் காவல் துறை, ஊடகவியலாளர்களுக்கான விதிமுறைகள் எனும் பெயரில் கடுமையான அடக்குமுறையை அமல்படுத்த முயல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊடகங்கள் மீது கோபம்
அமெரிக்காவில், காவல் துறையினரின் அத்துமீறல்களைக் காணொலி வடிவமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு போன்றோர் போலீஸாரின் வன்முறைப் பிரயோகத்தாலும் துப்பாக்கிச் சூடுகளாலும் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்களால் காணொலியாகப் பதிவுசெய்யப்பட்டு, சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன. இதையடுத்து, வெள்ளையினக் காவல் துறையினரின் இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக உலக அளவில் போராட்டங்கள் வெடித்தன.
அத்துடன், போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நிகழ்த்தும் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும் பரவலாக வெளியாகின. போராட்டக்காரர்கள் மீது மிளகுப் பொடியைப் பீய்ச்சியடிப்பது, தடியடி நடத்துவது, ரப்பர் குண்டுகளால் சுடுவது என்று காவல் துறையினர் கடுமையாக நடந்துகொண்டனர். அது தொடர்பாக ஊடகங்களில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த அழுத்தங்களின் காரணமாக, காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் ஆளாகியிருக்கின்றன. இப்படியான சூழலில்தான், ஊடகவியலாளர்களுக்குப் புதிய கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவர நியூயார்க் காவல் துறை முயல்கிறது.
இந்தப் பரிந்துரைகளின்படி, ‘முறையான சட்ட அமலாக்க நடவடிக்கைகளில்’ ஓர் ஊடகவியலாளர் தலையிடுவதாகக் காவல் துறையினர் கருதினால், அவர் ஊடகத் துறையில் பணிபுரிவதற்கான சான்றுகளை ரத்துசெய்யும் அளவுக்குக் காவல் துறையினருக்குக் கட்டற்ற அதிகாரம் கிடைக்கும். செய்தியாளர்கள் கைதுசெய்யப்படும் அபாயம்கூட இருக்கிறது. இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், காவல் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பாகச் செய்தி சேகரிப்பது என்பது சவாலான விஷயமாக மாறிவிடும் என்று பலரும் கருதுகிறார்கள். “இது ஊடகச் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தும் அப்பட்டமான முயற்சி” என்று கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பென் (PEN) அமைப்பு கண்டித்திருக்கிறது.
ஊடகங்களை வெறுக்கும் அதிபர்
ஊடகவியலாளர்களை அதிபர் ட்ரம்ப் நடத்தும் விதத்துக்கும், இந்தப் போக்குக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்குப் பின்னர் தன்னெழுச்சியாக நடந்த போராட்டங்களுக்கு ஊடகங்கள்தான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியவர் ட்ரம்ப். அதுமட்டுமல்ல, “சில ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் மக்களின் எதிரிகள்” என்று பேசி வருபவர் ட்ரம்ப். அதனால்தான், சுதந்திரமாக இயங்கும் ஊடகங்களை அவரது ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்கள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறைகளைப் பிரயோகித்தனர்.
புலிட்சர் விருது பெற்ற பத்திரிகையாளர் பார்பரா டேவிட்ஸன், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த போராட்டம் தொடர்பாகச் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது போலீஸாரால் மிரட்டப்பட்டார். தனது அடையாள அட்டையைக் காட்டியபோது அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரைத் தாக்கியிருக்கின்றனர். “என் அனுபவத்தில் இவ்வளவு மோசமான நிகழ்வை நான் எதிர்கொண்டதில்லை” என்று அதிர்ச்சியுடன் பதிவுசெய்திருக்கிறார் அவர்.
ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணமடைந்த மின்னெசொட்டா மாநிலத்தில் நடந்த போராட்டத்தின்போது, சிஎன்என் சேனலைச் சேர்ந்த செய்தியாளர் குழுவினர் கைது செய்யப்பட்டது இந்தச் சம்பவங்களின் உச்சம். அதே சேனலைச் சேர்ந்த ஒரு செய்தியாளரை ஒரு காவலர் தாக்கிய சம்பவமும் நடந்தது. ஊடகவியலாளர்கள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே காவலர்கள் தாக்கியதாகப் பல செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் சர்வாதிகார நாடுகளில் பரவலாக நடக்கும் விஷயங்கள்தான். ஆனால், ஜனநாயக நாடான அமெரிக்காவிலும் இப்படி கடும் கண்டனத்தை எழுப்பியிருக்கிறது.
நேர்மாறான விளைவு
ஒருவகையில், இந்தப் பரிந்துரைகள் திடீரென உருவாக்கப்படவில்லை என்பதும் உண்மை. செய்தி சேகரிக்கும்போது தனது அடையாள அட்டையைக் காவலர்கள் பல முறை பறிமுதல் செய்தது தொடர்பாக, புகைப்படக்காரரும் நிருபருமான ஜேஸன் நிகோலஸ் 2015-ல் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாகவே இந்தப் புதிய விதிமுறைகளை உருவாக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில்தான் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.
1993-ல், நியூயார்க் நகரத்தின் மேயராகப் பதவி வகித்த டேவிட் டின்கின்ஸ் (அந்நகரின் முதலும் கடைசியுமான கறுப்பின மேயர் இவர்தான்!), காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பொதுமக்கள் சார்பில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். காவல் துறையினர் கடைப்பிடிக்க வேண்டியவை என அந்த அமைப்பு சில முக்கிய விஷயங்களைப் பரிந்துரைத்தது. அவை எதுவும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. சந்தேகத்துக்குரியவர்கள் எனும் பெயரில் பிடிக்கப்படுபவர்களின் கழுத்தை நெரிப்பதையும் நியூயார்க் நகரக் காவல் துறை தடை செய்திருந்தது. ஆனால், அதைக் கடைப்பிடிப்பதில் காவல் துறையினர் அக்கறை காட்டுவதில்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ஊடகங்களை மேலும் கட்டுப்படுத்தவே முயற்சிகள் நடக்கின்றன.
நசுக்கப்படும் குரல்கள்
கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு நிகராகக் காவல் துறையினரும் பணியாற்றிவருகிறார்கள் என்பதை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட பிரதான ஊடகங்கள் அங்கீகரிக்கவே செய்கின்றன. அதேசமயம், பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தும் காவலர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில் என்ன தவறு என்பதுதான் ஊடகவியலாளர்களின் கேள்வி.
தற்சமயம், இந்த விதிமுறைகள் தொடர்பான அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் விதிமுறைகள் இறுதி செய்யப்படும். எனினும், இப்படியான விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.
ரஷ்யா, வெனிசுலா, அர்ஜென்டினா, எகிப்து, பிலிப்பைன்ஸ் வங்கதேசம் எனப் பல்வேறு நாடுகளில் ஊடகத் தணிக்கை, பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது, உடல்ரீதியான தாக்குதல்கள், அவதூறு வழக்குகள் என ஊடகவியலாளர்கள் மீது கடும் அழுத்தங்கள் தரப்படுகின்றன. அதிகார வர்க்கத்தினரின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள், பார்வைகள், விமர்சனங்கள் போன்றவற்றைப் பேசும், எழுதும் சுதந்திரத்தை ஊடகங்கள் இழந்துவிட்டால் ஜனநாயகமே கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை!