சவுதி மன்னர் சல்மான் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 84.
இதுகுறித்து சவுதி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “சவுதி மன்னர் சல்மானுக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் சல்மானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இராக் பிரதமர் முஸ்தப்பா அல் கதிமி, தனது சவுதி பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இதனை சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதியின் இளவரசராக உள்ள முகமது பின் சல்மான் மன்னருக்கு அடுத்து அதிகாரத்தில் உள்ள சக்திவாய்ந்த நபராக அறியப்படுகிறார். மேலும், இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த சில வருடங்களாக சவுதியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக இளவரசர் சல்மானுக்கு சவுதி இளைஞர்களிடையே பலத்த ஆதரவு உள்ளது. மேலும் மன்னர் சல்மானுக்கு அடுத்து முகமது பின் சல்மான் மன்னராவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று சவுதி அரச குடும்ப வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதியில் கரோனா
சவுதியில் 2,50,920 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,486 பேர் பலியாகி உள்ளனர்.