அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தின் பெரிய நகரமான போர்ட்லேண்ட் நகரில் போலீஸ் கூட்டமைப்பு கட்டிடத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.
அமெரிக்காவில் கருப்பர்களை அடக்கி ஒடுக்கும் ஆட்சியதிகார நிறவெறிக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கருப்பர்கள் உயிர் முக்கியம் என்ற போராட்ட வடிவம் உலகம் முழுதும் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் ஓரேகான் மாநில போர்ட்லாண்ட் போலீஸார் கூறும்போது “போர்ட்லேண்ட் போலீஸ் அசோசியேஷன் கட்டிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து கட்டிடத்துக்குத் தீ வைத்தனர். அதிகாரிகள் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் ” என்று ட்வீட் செய்துள்ளனர்.
போர்ட்லேண்டில் போலீஸ் என்ற பெயர் பட்டி இல்லாமல், பேட்ஜ்கள் இல்லாமல் போலீஸ் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் போராட்டக்காரர்களை கைது செய்து துன்புறுத்தி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது, ஆர்ப்பாட்டங்களும் வலுத்துள்ளன. இவர்கள் நம்மூர் தடை செய்யப்பட்ட பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போல் செயல்படுவதாக புகார் அங்கும் எழுந்துள்ளது.
போர்ட்லேண்ட் மேயர் டெட் வீலர் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொடர்பு கொண்டு, நகரத்திலிருந்து இத்தகைய பெடரல் ஏஜெண்ட்களை உடனடியாக அகற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.