அமெரிக்காவில் தலைவிரித்தாடும் கரோனா வைரஸ் பாதிப்பினால் விமானச் சேவைகள் கடும் நஷ்டமடைந்து வருகின்றன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 25,000 ஊழியர்களை பணியிலிருந்து அனுப்ப முடிவெடுத்துள்ளது.
போதுமான ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறினாலோ, அல்லது 2 ஆண்டுகளுக்குப் பகுதி அளவு சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொண்டாலோ தற்காலிக கட்டாய பணிவிடுப்பு எண்ணிக்கை குறையும்.
ஆனால் அமெரிக்க ஏர்லைன்ஸின் இரண்டு முதன்மை அதிகாரிகளோ, வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது, இதனால் அக்டோபரில் மீண்டும் முன்னேற்றம் இருக்கும் போது இப்போதைய தற்காலிக விடுப்பு அல்லது பணி நீக்கம் தேவையில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால் ஏர்லைன்ஸின் சி.இ.ஓ. அவர்கள் கருத்தை மறுத்து, “துரதிர்ஷ்டவசமாக நிலைமை முன்னேறும் போல் தெரியவில்லை வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது பல மாநிலங்கள் மேலும் லாக்-டவுன் அறிவித்து வருகிறது. எனவே விமானப் பயணத்துக்கான தேவை குறைந்துதான் வருகிறது” என்றார்.
அமெரிக்க அரசு பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க அமெரிக்க ஏர்லைன்ஸிற்கு 25 பில்லியன் டாலர் உதவி அளித்துள்ளது, அதுவும் அக்டோபர் மாதம் வரை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் யுனைடெட் ஏர்லைன்ஸ் 36,000 ஊழியர்கள் வேலையை இழப்பார்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டது. டெல்டா நிறுவனம் 2000 பைலட்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், விமான பயணிகள் உதவி ஊழியர்கள் 10,000 பேர், அதாவது 37% ஊழியர்களுக்கு தற்காலிக பணி நீக்க நோட்டீஸ்கள் சென்றுள்ளன. 4,500 விமான நிலைய தரை ஊழியர்கள், 2500 பைலட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.