ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மாகாணங்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''கரோனா தொற்று பிற நாடுகளில் வேகமாகப் பரவி வந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ளது.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சமூகப் பரவல் காரணமாக பிற மாநிலங்கள் தற்போது நெருக்கடிக்கு உள்ளாயின. தற்போது ஏற்பட்டிருக்கும் பரவல் இரண்டாம் கட்டப் பரவலாக இருக்கக்கூடும் என்ற நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்தந்த மாகாண அரசுகள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளன.
பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சில மாகாணங்களில் எல்லைகள் மூடப்படுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அம்மாகாணத்துடனான எல்லையைத் திறக்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள்து.
மேலும், நோய்ப் பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று வந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை குயின்ஸ்லாந்து மாகாணம் மீண்டும் கட்டாயம் ஆக்கியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிற மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
தற்போது விக்டோரியா மாகாணத்தில் புதிதாக 270 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கரோனா தொற்று எண்னிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.
2.25 கோடி மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் இதுவரையில் 9,980 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 108 பேர் பலியாகியுள்ளனர்.