‘மில்லியனர்கள்’ என்றழைக்கப்படும் பெரும்பணக்காரர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்நோக்கில் அதிக வரி செலுத்த தயாராக இருப்பதாக அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
‘மனிதநேயத்துக்கான பணக்காரர்கள்" என்று தங்களை அழைத்துக் கொள்ளும் 80 பெரும் பணக்காரர்கள் உலக நாடுகளின் அரசுகளுக்கு திறந்த கடிதம் ஒன்றைஎழுதியுள்ளனர். அதில் தங்களைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கடிதத்தில், “நாங்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் அழைத்து வரவில்லை. உணவுப் பொருட்களை வீடு வீடாக கொண்டு சேர்க்கவில்லை. ஆனால், எங்களிடம் பணம் இருக்கிறது. அதிகமாக இருக்கிறது. பணம்தான் தற்போது முக்கிய தேவையாக இருக்கிறது. உலகம் பழையபடி மீண்டுவர வரும் காலத்திலும் அதிகம் தேவைப்படும். எனவே பெரும் பணக்காரர்களுக்கு வரியை உயர்த்தலாம். உடனடியாக, தேவையான அளவு வரியை உயர்த்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
கரோனா பாதிப்பால் பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. ஏற்கெனவே சில நாடுகள் வரியை உயர்த்தியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிதிசார் கல்வி நிறுவனம் வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெயின், ரஷ்யா ஆகிய நாடுகளில் வரி உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு பிரதமர்கள் வெளியிட்டுள்ளனர். சவுதி அரேபியா விற்பனை வரியை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்ஃபாம், இங்கிலாந்தின் டேக்ஸ் ஜஸ்டிஸ் மற்றும் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக இதில் கையெழுத்திட்டுள்ள பெரும் பணக்காரர்களில் பென் அண்ட் ஜெர்ரி ஐஸ்க்ரீம் இணை நிறுவனர் ஜெர்ரி கிரீன்ஃபீல்ட், திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸ் மற்றும் இயக்குநர் அபிகாய்ல் டிஸ்னி ஆகியோரும் அடங்குவர். மேலும் அமெரிக்க தொழிலதிபர் சிட்னி டாபோல், நியூசிலாந்து ரீடெய்ல் தொழிலதிபர் ஸ்டீபன் டிண்டல் ஆகியோரும் உள்ளனர்.