அமெரிக்காவில் கரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட அமெரிக்க இளைஞர் பரிதாபமாக இறந்தார்.
நாவல் கரோனா வைரஸ் (கோவிட் 19) உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 35,000 பேர் பலியாகியுள்ளனர்.
இப்படியாக, அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் அன்றாடம் குவிந்துவர, மாஸ்க் அணிவதால் பயனில்லை, கரோனா என்றொரு வைரஸே இல்லை, எல்லாம் வெறும் வதந்தி என்றொரு சாரார் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் இடையே கரோனா பார்ட்டி நடத்தும் அபாயகரமான கலாச்சாரம் திடீரென பரவிவருகிறது.
கரோனா பார்ட்டி நடத்தி முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு என்ற விபரீத அறிவிப்பும் வெளியிடுகின்றனர். தொற்றை சரி செய்வதா இல்லை இத்தகைய இளைஞர்களை அடக்குவதா எனத் தெரியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.
உயிரைப் பறிகொடுத்த இளைஞர்:
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளார்.
இது குறித்து டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் ஆன்டோனியோ பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி ஜேன் ஆப்பிள்பை கூறும்போது, "அந்த இளைஞர் கரோனா வைரஸ் என்பதே வதந்தி என தீவிரமாக நம்பியுள்ளார்.
அதன் காரணமாகவே அவர், கரோனா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். தான் ஓர் இளைஞர் என்பதால் தன்னை நோய்த்தொற்று அண்டாது என நம்பியுள்ளார். ஆனால், கரோனா பாதித்தவர் ஒருங்கிணைத்த அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டதன்மூலம் அவர் தொற்றுக்கு ஆளானார். அவரது உயிரும் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.
இளைஞர்கள் தங்களுக்கு தாக்கப்படும் நோயின் தீவிரத்தை உணர்வதில்லை. கரோனா பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு வெளியில் அறிகுறிகள் சில நேரங்களில் தெரிவதில்லை. ஆனால், அவர்களின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்கும் போதுதான் உண்மையில் அவர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியவருகிறது. எனவே இளைஞர்கள் தொற்றை அசட்டை செய்யக்கூடாது " என்று தெரிவித்தார்.
'நான் தவறு செய்துவிட்டேன்..'
தொற்று ஏற்பட்ட பின் அந்த நபர், வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் செவிலியிடம் மிகுந்த வருத்தத்துடன் "நான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
அவரது இந்த உருக்கமான வார்த்தை கரோனா பார்ட்டிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பாடமாக அமையும் என இணையதளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.
இதுவரை மாஸ்க் அணிவதைப் புறக்கணித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது மாஸ்க் அணியத் தொடங்கியிருப்பதற்கும் வரவேற்பு குவிந்து வருகிறது.
அதே வேளையில், அமெரிக்காவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று அந்நாட்டு கல்வித்துறையின் அறிவிப்பு மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.