உலகம்

2017-ம் ஆண்டில் உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை

பிடிஐ

30-வயதாகும் ரஷ்ய கணினி விஞ்ஞானி ஒருவருக்கு சீனாவில் உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதற்காக இத்தாலி-சீன மருத்துவக் குழு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

இத்தாலிய நியூரோ-சர்ஜன் டாக்டர் செர்ஜியோ கனாவெரோ 36 மணி நேரம் நீடிக்கும் இந்த அறுவை சிகிச்சையை நடத்த தனது மருத்துவக் குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ரஷ்ய கணினி விஞ்ஞானி வேலரி ஸ்பிரிடோனவ் என்பவருக்கு மரபணு தசை-சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது, இதனை Werdnig—Hoffmann நோய் என்று மருத்துவர்கள் அழைப்பர். அதாவது எஸ்.எம்.என் 1 என்ற புரோட்டீனில் மரபணு ரீதியாக ஏற்படும் கோளாறினால், நரம்புகளின் செயல்பாடுகள் முடங்கும். உடலின் பல்வேறு நரம்புகள், மைய நரம்பு மண்டலம் சிதைதல் என்ற degenerative disease ஆகும் இது.

இந்நிலையில் ரஷ்ய விஞ்ஞானி ஸ்பிரிடோனவ் தலையை வேறொரு உடலில் பொருத்தும் உலகின் அரிய அறுவை சிகிச்சை முதன் முதலாக 2017-இல் இவருக்கு நடத்தப்படுகிறது. முதலில் இதற்கு ஸ்பிரிடோனவ் தலை குளிரடைய வேண்டும், இவரது தலை பொருத்தப்படும் உடலும் குளிரடைய வேண்டும் இதன் மூலம் பிராணவாயு இல்லாமல் செல்கள் உயிருடன் இருக்கும் காலக்கட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றால் அது ஒரு மிகப்பெரிய சாதனையாகவும், மருத்துவ அற்புதமாகவும் பார்க்கப்படும்.

ஆனாலும், 99% வெற்றி பெறும் என்ற உறுதி எட்டப்பட்டவுடன்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்கிறார் மருத்துவர் கனாவெரோ.

இந்த அறுவைசிகிச்சையின் படி, ஸ்பிரிடோனவ் உடலிலிருந்தும், இவர் தலை பொருத்தப்படும் உடலிலிருந்தும் தலைகள் அறுத்தெடுக்கப்பட்டு, பிறகு ஸ்பிரிடோனவ் தலை அந்த மற்றொரு உடலில் பொருத்தப்படும்.

அதன் பிறகு ஸ்பிரிடோனவ் ஒருமாத காலம் கோமா நிலையில் வைக்கப்படுவார். அவருக்கு மருந்துகள் செலுத்தப்படும். ஏனெனில் புதிய உடலுக்கும் தலைக்கும் ஒத்திசைவு ஏற்படவேண்டும்.

ஆனாலும் மருத்துவ உலகம் இந்த அறுவைசிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது ஒருவரை 4 வாரங்கள் கோமாவில் ஆழ்த்தி அவரை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய சாத்தியமில்லை என்று கலிபோர்னியா பல்கலைக் கழக நரம்பியல் பேராசிரியர் ஹாரி கோல்டுஸ்மித் கூறுகிறார்.

          
SCROLL FOR NEXT