தாய்லாந்து அரசு கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் மருந்து விலங்குகள் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதில் குறுப்பிடத்தக்க பலன் தெரியவந்துள்ள நிலையில் அம்மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடங்கப்படும் என்று தாய்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஏழு மாதங்களுங்கும் மேலாக அதன் பரவல் நீடித்து வருகிறது. இதுவரைக்கும் கரோனா வைரஸுக்கென்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவரமாக இறங்கியுள்ளன.
இந்தச் சூழலில் தாய்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்து விலங்குகளிடையே பரிசோதிக்கப்பட்டபோது எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளது. இந்நிலையில் மனித உடல்களில் செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மனித உடல் பரிசோதனை தொடங்க உள்ளது. அதற்கென முதற்கட்டமாக 10,000 மாருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து பாங்காக்கின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழக தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தின் இயக்குனர் கியாட் கூறியதாவது:
“‘ஆரம்பத்தில் நாங்கள் ஜூன் மாதத்தில் பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தற்போதைய நெருக்கடி நிலையில் திட்டமிட்டபடி பணிகளை முடிப்பது சிரமமாக மாறியுள்ளது. மனித உடலில் பரிசோதிப்பதற்கான முதற்கட்ட மருந்து தயாரிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும். இரண்டாம் கட்ட தயாரிப்பு நவம்பரில் நிறைவடையும். உருவாக்கப்படும் பத்தாயிரம் மருந்துகள் ஐயாயிரம் நபர்களிடையே பரிசோதிக்கப்படும். திட்டமிட்டபடி அனைத்தும் நடத்தால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மருந்து பொதுப்பயன்பாட்டுக்கு வரும்” தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்திலேயே தாய்லாந்து அரசு கரோனா தொற்றை முறையான திட்டமிடலுடன் கட்டுப்படுத்தியது. இதுவரையில் மொத்தமாக 3,217 பேர் மட்டுமே கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 58 பேர் பலியாகியுள்ளனர்.