பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 39,000க்கும் அதிகமானவர்கள் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 39,023 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 18,39,850 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,469 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேசிலில் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறக்குமாறு மாகாண மேயர்களிடம் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிரேசிலில் தளர்வுகள் மேற்கொண்டால் குளிர்காலத்தில் பிரேசிலில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனோரா கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.