உலகம்

இது ஆபத்தான நேரம்: விக்டோரியா மாகாண மக்களுக்கு அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இது ஆபத்தான நேரம் என்று விக்டோரிய மாகாணத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நேற்று 273 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு தற்போது மூன்றிலக்க எண்ணைத் தொட்டுள்ளது விக்டோரிய மாகாண அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மாகாணத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “இது ஆபத்தான நேரம். நாங்கள் விக்டோரியா மாகாண மக்களிடம் நிறைய கேட்கிறோம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் எதிர்கொள்ளும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. விதிகளைப் பின்பற்றுங்கள். தேவை இருந்தால் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வாருங்கள்” என்று தெரிவித்தார்.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT