அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 60,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 60,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே 50,000 வரை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களாக 50 மாகாணங்களிலும் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கர்கள் முகக் கவசம் அணியாததன் விளைவாகவே கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.