ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 224 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் இன்று ஒரே நாளில் அதிபட்சமாக 224 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஜப்பானில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா மருத்துவ பரிசோதனைகளை ஒரு நாளைக்கு 10,000 என அதிகரிக்க அரசு முடிவுச் செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இதுவரை சுமார் 20,174 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 17,331 பேர் குணமடைந்த நிலையில் 980 பேர் பலியாகி உள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 6 முக்கியப் பிராந்தியங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொழில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில் ஜப்பானில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதிமுதல் ஊரடங்கு நீக்கப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு ஜப்பானில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரோனா தொற்று அதிகமுள்ள 129 நாடுகளுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.