சீனா மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விரைவில் கேள்விப்படுவீர்கள் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சீனா மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறும்போது, “சீனா மீதான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விரைவில் கேள்விப்படுவீர்கள். அதனை மட்டும்தான் நான் தற்போது உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் கூறும்போது, “வர்த்தக ஏற்றத்தாழ்வைத் தடுக்க சீனர்கள் மீது வரியை விதித்த முதல் அதிபர் ட்ரம்ப்” என்று தெரிவித்தார்.
பிராந்திய நிலைத்தன்மையைச் சீர்குலைக்க ஒரேமாதிரியான ஆக்கிரமிப்புச் செயல்பாடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியை நாம் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா முன்னரே சீனாவை விமர்சித்து இருந்தது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலக அறிவிக்கை கடிதம் கொடுத்திருப்பதை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
கரோனா விவகாரம் மற்றும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே சமீபகாலமாக மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக தடை மற்றும் வரி விதிப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.