நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை பதவி நீக்கம் செய்ய நடைபெற்று வரும் முயற்சியைத் தடுக்க அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் சீன தூதர் ஹோ யாங்கி சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் இந்திய எதிர்ப்பு அங்கு சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை பேசி வந்தார்.
சமீபமாக தன் ஆட்சியைக் கவிழ்க்க இந்தியாவுடன் சேர்ந்து சதி நடப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை வைத்தார் கே.பி.சர்மா ஒலி.
இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யப் போவதாக எழுந்த செய்திகளை அடுத்து நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாலா நாத் கனால், மாதவ் குமார் நேப்பாள், உள்ளிட்டோரை சீன தூதர் ஹோ யாங்கி சந்தித்துள்ளார். ஒலிக்கு எதிராகச் செயல்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
நேபாள் குடியரசுக் கட்சித் தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்தார். அதே வேளையில் சர்மா ஒலியை பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கத் துடிக்கும் முன்னாள் பிரதமர் பிரசன்டா சீனத் தூதரை சந்திப்பதை தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஒலியைக் காப்பாற்ற சீனா, நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.