பாகிஸ்தானில் சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,31,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,344 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,31,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர்.
4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களே கரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சிந்து மாகாணத்தில் 94,528 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் 81,963 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலுசிஸ்தானில் 10,814 பேரும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் 1,342 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அரசு கவனமாக இல்லை என்று கூறி பாகிஸ்தானில் மருந்துவர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.