பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கரோனா பாஸிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே பாதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 2 லட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.31 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒருவராமாக வீட்டில் இருந்தபடியே குரேஷி சிகிச்சை எடுத்துக்கொண்டு அலுவல் பணியைக் கவனித்து வருகிறார்.
"அல்லாஹ்வின் கருணையால் உடல்நலத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சிகிச்சை எடுத்துவருகிறேன் விரைவில் கரோனாவிலிருந்து மீள்வேன்" என குரேஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் பிரதமர் இம்ரான் கானின் சுகாதாரப்பிரிவின் தனிப்பட்ட ஆலோசகரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ஜாஃபர் மிர்ஸாவுக்கு இன்று கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் “ எனக்குக் கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறேன்.
லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. எனக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். என் சக ஊழியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள். அதுதான் நம்மை வேறுபடுத்திக்காட்டும், உங்களால் நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன், முதாகிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான்(எம்கியூஎம்-பி) தலைவரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சயத் அமினுல் ஹக் கரோனாவில் பாதிக்கப்பட்டார். மேலும், பிஎம்எல்-நவாஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
மேலும், ரயில்வே அமைச்சர் ரஷித் அகமது, முன்னாள் பிரதமர் ஷாகித் காகன் அப்பாஸி, போதை மருந்து தடுப்புத்துறை அமைச்சர் ஷர்யார் அப்ரிதி, பிடிஐ கட்சியின் கொறடா ஆமிர் தோகர் ஆகியோரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்
இதுதவிர பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான பிஎம்எல்-என் கட்சியின் தலைவர் ஷென்பாஸ் ஷெரீப், ஏஎன்பி கட்சியின் குலாம் அகமது பிலோர், சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் இஸ்மாயில், சிந்து மாநிலகல்வி அமைச்சர் சயித் கானி, சபாநாயகர் ஆசாத்குவாசிர், பஞ்சாப் மாநில சபாநாயகர் முகமது மசாரி ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது