2036-ம் ஆண்டு வரை தானே ரஷ்ய அதிபராக இருக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின்.
ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பாக ஒருவார வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து 2036-ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடர உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பு பொய்யானது என்று எதிர்க் கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.
ஆனால் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் இன்று (ஜூலை 4) முதல் அமலாகும் வகையிலான உத்தரவில் புதின் கையெழுத்திட்டுள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் பேசிய அவர், ’’ரஷ்ய சமூகத்தினர், 2036 வரை நான் அதிகாரத்தில் இருக்கும் வகையிலான சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் ஒருமைப்பாட்டைக் காட்டியுள்ளனர். அவர்களிள் சட்டத் திருத்தத்தின் தேவையை உணர்ந்துள்ளனர்.
நாட்டுக்குத் தேவையான, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் தேர்தல் முடிவுகளின் மூலம் உச்சபட்ச ஒற்றுமையை ரஷ்யர்கள் காட்டியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
4-வது முறையாக ரஷ்யாவின் அதிபரான புதினின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு முடியும் நிலையில், தற்போது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.