மியான்மரின் வடக்குப் பகுதியில் பிரபல ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் பகுதியில் உள்ளது ஜேட் (மாணிக்க கல்) சுரங்க நிலையம். இங்கு கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கற்களை சேகரித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவை நேரில் பார்த்த 38 வயதான மாவுங் கைங் கூறும்போது, “ திடீரென அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. மக்கள் அனைவரும் ஓடுங்கள், ஓடுங்கள் என்று குரல் எழும்பினர். சுரங்கத்தில் அடியில் நின்றுக் கொண்டிருந்த அனைவரும் மாயமாகினர். எனது இதயம் கனமாக உள்ளது. மண்ணில் மாட்டி கொண்டவர்கள் உதவி கேட்டு குரல் எழுப்பினார்கள் ஆனால் யாரும் உதவவில்லை” என்றார்.
மியான்மரில் சமீபத்தில் நடந்த மோசமான சுரங்க விபத்து என்று மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மர் சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. சுரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, விபத்தைத் தவிர்க்கும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.