உலகம்

அமெரிக்காவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பு: மீண்டும் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு

ஏஎன்ஐ

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இங்கு இதுவரை 27 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம்பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 11.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், சமூக விலகல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மக்கள் அரசின் அறிவிப்புகளை காற்றில் பறக்கவிடும் வகையில்தான் நாள்தோறும் வலம் வருகிறார்கள். இதனால் மீண்டும் அமெரி்க்காவின் பல்வேறு நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரி்த்து, தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வேலைக்குச் செல்லும் அமெரிக்கர்கள் மீண்டும் வீடு திரும்பியதால் அங்கு வேலைஇழப்புகள் அதிகரித்து வருகிறது.

வாஷிங்டன் போஸ்ட் ஊடக செய்திகளின் படி அமெரிக்கா மீண்டும் இவர்களுக்கு கூடுதல் உதவி புரியாது என்று கூறுகிறது. ஹோட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள், திரையரங்குகள் ஆகியவை இயங்கும் நேரங்களைக் குறைத்துள்ளன, இவற்றில் சில மீண்டும் திறக்கும் நாளை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளன.

பல மாநில கவர்னர்கள் புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளனர். சமீப வாரங்களில் கலிபோர்னியா, புளோரிடா, டெக்ஸாஸ், ஆகியவை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் பகுதியளவு உணவு விடுதி, பார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அர்கான்சாஸ், டெலாவேர், இதாஹோ, லூசியானா, மிச்சிகன், நெவாடா, நியூஜெர்சி, நியூ மெக்சிகோ, நார்த் கரோலினா ஆகிய இடங்களில் மறுதிறப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதில் பலரும் மணிக்கு இத்தனை சம்பளம் என்று வாங்குபவர்கள் மற்றும் குறைந்த சம்பள ஊழியர்கள் ஆவார்கள். இவர்கள் தற்போது இரண்டாவது முறையாக வேலையை இழக்க நேரிட்டுள்ளது.

உணவுச்சேவை நிறுவனங்கள், மதுபான விடுதிகள் சுமார் 80லட்சம் பணியாளர்கள் கொண்டதாகும். மார்ச்-ஏப்ரலில் இதில் 60 லட்சம் ஊழியர்கள் வேலையை இழந்தனர்.

கரோனா ஏற்படுத்திய மிகப்பெரிய முட்டுச்சந்து என்னவெனில் பொருளாதார நடவடிக்கைகளைத் திறந்தால் பரவல் அதிகரிக்கும், மூடினால் வேலை வாய்ப்புகள் பறிபோகும். இதனைத் தீர்க்க சிறந்த மாதிரி எதுவும் இல்லை என்று ஸ்டான்போர்ட் பலகலைக் கழக பேராசிரியர் கெவின் ஸ்கூல்மேன்.

SCROLL FOR NEXT